கொல்கத்தா: ஒரு போட்டோ, ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பார்கள், அது உண்மைதான் என்பதை நிரூபித்து உள்ளது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தலைப்பு ஏதும் இடாமல், ட்விட்டரில் பதிவிட்டு உள்ள போட்டோ. அந்த வகையில், தலைநகர் டெல்லியில், பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா, கடந்த 28ஆம் தேதி நடைபெற்றது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு, நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதிக்கே அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் இருந்து 20 சைவ மட ஆதீனங்கள், மதகுருமார்கள், பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் மட்டுமே கலந்து கொண்டு இருந்தனர். இந்த நிகழ்விற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு, அழைப்பு விடுக்காததை கண்டித்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், இந்நிகழ்வை புறக்கணித்திருந்தது.
இந்நிலையில், சுதந்திரத்திற்குப் பிறகு என்ற பெயரில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் இருப்பது போன்று ஒரு போட்டோவும், அதன் கீழ்பகுதியில், மே 28ஆம் தேதி நடைபெற்ற புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில், பிரதமர் மோடி, ஆதீனங்களுடன் இருப்பது போன்று ஒரு போட்டோவும், சமீபகாலமாக, சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
மம்தா ட்வீட்: இந்த போட்டோவை, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, எவ்வித தலைப்பும் இடாமல், ட்விட்டரில் பதிவு செய்து இருந்தார். மம்தா பானர்ஜியின், இந்த போட்டோ ட்விட்டிற்கு, 47 ஆயிரம் பேர் லைக் செய்திருந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி, இந்த விவகாரத்தை, பெரும் பேசுபொருளாக மாற்றி உள்ளது.