கொல்கத்தா (மேற்கு வங்கம்):சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாள் இன்று (ஜன.23) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 23, 1897ஆம் ஆண்டு பிறந்த நேதாஜி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்.
இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையொட்டி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேதாஜிக்கு மரியாதை செலுத்தினார். இதையடுத்து, நேதாஜியின் பிறந்தநாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "தேசிய மற்றும் உலக அளவில் அறியப்படும் நேதாஜியின் எழுச்சி வங்காளத்தில் இருந்து தொடங்கப்பட்டது இந்திய வரலாற்றில் நிகரற்றது.
மேற்கு வங்கத்தில் நேதாஜியின் 125ஆவது பிறந்தநாள் தேஷ் நாயக் திபாஸ் (#DeshNayakDibas) எனக் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் இன்று அவரது பிறந்தநாளையொட்டி நேதாஜியின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். இது ஒட்டுமொத்த தேசமும் தேசியத் தலைவருக்கு மரியாதை செலுத்தவும், நேதாஜியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வழிவகுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "நேதாஜியை நினைவு கூரும் விதமாக சர்வதேச ஒத்துழைப்புடன் ஒரு தேசிய பல்கலைக்கழகம், ஜெய் ஹிந்த் பல்கலைக்கழகம், 100 விழுக்காடு மாநில நிதியுதவியுடன் அமைக்கப்படும். இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பு அலங்கார ஊர்தியில் நேதாஜி மற்றும் வங்காளத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் இடம்பெற்று காட்சிப்படுத்தப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Punjab Polls: பஞ்சாப் தேர்தலில் அமரீந்தர் சிங் போட்டி!