கொல்கத்தா: நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான அமர்த்தியா சென்னின் (89) சாந்திநிகேதனில் உள்ள அவரது வீடு ‘பிரடிச்சி’ (Pratichi) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அமர்த்தியா சென், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்தும், நாட்டில் உள்ள இந்திய - இஸ்லாமியர்களின் நிலை குறித்தும் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, அமர்த்தியா சென்னின் பிரடிச்சி என்ற வீடு உள்ள குறிப்பிட்ட அளவிலான நிலம், மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் உள்ள விஷ்வ பாரதி மத்திய பல்கலைக்கழகத்திற்கு (Visva Bharati) சொந்தமானது எனவும், எனவே ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பல்கலைக்கழகம் தரப்பில் அமர்த்தியா சென்னுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால், இந்த நிலம் தனது அப்பாவால் வாங்கப்பட்டது என்றும், சில நிலங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டது என்றும், தன்னை வெளியேற்றவே இத்தகையான முயற்சிகளை மத்திய பாஜக அரசு முயற்சித்து வருவதாகவும் அமர்த்தியா சென் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 26) செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “பல்வேறு விதங்களில் மேற்கு வங்கத்தை மத்திய அரசு துன்புறுத்துகிறது.
மேற்கு வங்கம் ஒன்றும் உத்தரப்பிரதேசமோ, டெல்லியோ அல்லது குஜராத்தோ அல்ல. பாஜக ஆளும் மாநிலத்தில் எவ்வாறு பில்கிஸ் பானு பாலியல் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்தது? இது வங்கத்தில் நடைபெறாது. சுதந்திரப் போராட்டம், கலாசாரம், கல்வி ஆகியவை வங்கத்தின் அடையாளங்கள்.
இது ராஜா ராம் மோகன் ராய், ஐஷ்வர்சந்திரா வித்யாசாகர், சுவாமி விவேகானந்தா ஆகிய சிந்தனையாளர்கள் பிறந்த மண். நெருப்போடு விளையாடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அமர்த்தியா சென் விவகாரத்தில் யார் இந்த வேலையைச் செய்கிறார்கள் என வியக்கிறேன். அமர்த்தியா சென்னின் வீட்டை இடிக்க அவர்கள் விரும்புகின்றனர்.
ஒருவேளை அமர்த்தியா சென்னின் வீட்டை இடிக்க முற்பட்டால், அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவதில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். எனவே, அவருடைய வீட்டை இடிப்பதற்கு உள்ள ஆற்றல் யாருக்கு உள்ளது என்பதைப் பார்க்க நான் விருப்பப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, அமர்த்தியா சென்னின் இடம் தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை வேந்தராகக் கொண்டுள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பாஜகவின் கட்டளைகளை ஏற்று, இவ்வாறு தொந்தரவு செய்கிறார் என குற்றம்சாட்டினார். மேலும், அமர்த்தியா சென்னுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மம்தா கூறினார்.
இதையும் படிங்க:கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக முறை வென்றவர்கள் பற்றி அறிவோமா?