கொல்கத்தா: தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவதாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் திமுக அரசு தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதனிடையே கடந்த 10ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். இத்தீர்மானம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல், பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும், ஆளுநர்களுக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இதனால், ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றிய கையோடு, பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், அந்தந்த மாநில முதலமைச்சர்களும் ஆளுநர்களுக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். மாநில அரசுகள் மற்றும் சட்டமன்றங்களின் இறையாண்மை மற்றும் சுயமரியாதையை நிலைநிறுத்துவதற்கு மற்ற முதலமைச்சர்களும் இதேபோன்ற தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் தங்களது ஆதரவினை தெரிவித்திருந்தனர். ஆளுநர்களின் செயல்பாடுகளை எதிர்ப்பதற்கு தாங்களும் ஒத்துழைப்பதாகத் தெரிவித்தனர். அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவருவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி அளித்திருந்தார்.