மேற்குவங்கம்:ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கடந்த 2ஆம் தேதி, கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,000 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. படுகாயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பள்ளிக் கல்விக்கான செலவை அதானி குழுமம் ஏற்கும் என கெளதம் அதானி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இன்று (ஜூன் 5) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், விபத்தில் கை, கால்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்தார். விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து மன மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டவர்களுக்கும் நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 206 பேர் காயமடைந்து ஒடிசாவின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், தான் நாளை புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கிற்கு சென்று அங்கு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.