கலபுராகி :குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விருந்தில் அழைப்பு இல்லாமல் கலந்து கொள்ள முடியாது என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
18வது ஜி20 உச்சி மாநாடு பிரதமர் மோடி தலைமையில் தலைநகர் டெல்லியில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா, ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சர்வதேச உணவு சங்கிலி, உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்தினருக்கு இரவு உணவு வழங்கப்படுகிறது.
ஐடிசி, தாஜ் உள்ளிட்ட பிரபல உயர்தர ஹோட்டல்கள் மூலம் உணவுகள் தயாரிக்கப்பட்டு உலக தலைவர்களுக்கு பரிமாறப்படுகின்றன. அதேநேரம் இந்த இரவு விருந்தில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தால் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து உள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக கீழ்தரமான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், இந்த மாதிரியான அரசியல் நல்லதல்ல, மத்திய அரசு இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்றார். ஜி20 மாநாடு நல்லிணக்க கூட்டம் என்றும் நாட்டிலும் உலகிலும் நல்லிணக்கம் நிலவுவது நல்லது என்றார்.
மேலும் இதுகுறித்து பேசிய தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பரம், ஜனநாயகம் இல்லாதபோது அல்லது எதிர்க்கட்சி இல்லாத போது தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் என்றார். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், அவர்கள் இந்த விருந்தில் கலந்து கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் அதை புறக்கணித்தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், உடல் நலக் கோளாறு காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:தொகுதிப் பங்கீடு குறித்து பாஜகவுடன் இதுவரை எந்த விவாதமும் செய்யவில்லை: குமாரசாமி கருத்து.!