டெல்லி: நாடு முழுவதும் இன்று (நவ.14) முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள சாந்திவனத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளுக்கு, அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவரது சமூக வலைத்தளப்பதிவில், "இந்தியாவை பூஜ்ஜியத்திலிருந்து உச்சத்திற்குக் கொண்டு சென்றவர், பண்டித ஜவஹர்லால் நேரு. நவீன இந்தியாவை உருவாக்கியவர், ஜனநாயகத்தின் அச்சமற்ற பாதுகாவலர் மற்றும் உத்வேகத்தின் முன்னுதாரணம்.
நேருவின் முற்போக்குச் சிந்தனைகள் அனைத்தும் இந்தியாவின் சமூகம், அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றியது. நாட்டு மக்கள் அனைவரும் எவ்வித பாகுபாடும் இன்றி எப்போதும் ஒற்றுமையாக வாழ வழிவகுத்தது" என பதிவிட்டுள்ளார்.
மேலும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற வகையில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் அனைவரும் நேருவை அன்புடன் 'நேரு மாமா' (Chacha Nehru) என்று அழைப்பார்கள். நேரு அன்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நபராக அறியப்பட்டவர். குழந்தைகள் மீது நேரு அதிக பாசம் கொண்டவர்.
ஆகையால் தான் நேருவின் மறைவிற்கு பிறகு அவரது பிறந்தநாளை இந்தியாவில் 'பால் திவாஸ்' அல்லது 'குழந்தைகள் தினம்' ( Bal Diwas or Children's Day) என கொண்டாட ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது. நவம்பர் 14ஆம் தேதி 1889ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் பிறந்த அவர், மே 27ஆம் தேதி 1964 ஆண்டு இயற்கை எய்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும், நேருவின் பிறந்தநாள் அன்று நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக விளையாட்டுகள், போட்டிகள் போன்ற பல ஏற்பாடு செய்யப்படும்.
இதையும் படிங்க: world diabetes day 2023: சர்க்கரை நோய் ஒரு தண்டனை அல்ல.. வழிகாட்டுதல்களைப் பின்பற்றினாலே போதும்.