பெங்களூரு (கர்நாடகா): கடந்த ஆகஸ்ட் 18 அன்று அக்ரம் அகமது என்ற நபர் மாலத்தீவின் மாலே விமான நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். 51 வயதான இந்த நபர், தனது பயணத்தின்போது விமானப் பணிப்பெண்னை அழைத்து உள்ளார்.
இதனையடுத்து முதியவரின் சீட் அருகே வந்த பெண்ணிடம் தனக்கு பீர் மற்றும் முந்திரி ஆகியவை வேண்டும் என்று கேட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண், அந்த நபர் கேட்டவற்றை கொண்டு வந்து கொடுத்து உள்ளார். அப்போது, “உன்னைப் போன்ற ஒரு பெண்ணைத்தான் நான் 51 வருடங்களாகத் தேடிக் கொண்டு இருந்தேன். உனக்கு 10 டாலருக்குப் பதிலாக 100 டாலர் தருகிறேன். மீதி தொகையை நீயே வைத்துக் கொள்” என அப்பெண்ணிடம் கூறி உள்ளார்.
அது மட்டுமல்லாமல், விமானப் பணிப்பெண்ணின் உடலை தவறான நோக்கத்தில் தொட்டு உள்ளார். இதனால் பதறிப்போன அப்பெண், மற்றொரு பெண்ணிடம் இது குறித்து கூறி உள்ளார். பின்னர், மற்றொரு பணிப்பெண் பணத்தைப் பெறுவதற்காக அகமதுவின் அருகே சென்று உள்ளார்.
அப்போது, அந்த பணிப்பெண்ணின் பேண்ட் பையில் கையை விட்டு பணத்தை எடுக்க முயற்சி செய்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், இது தொடர்பாக மூத்த பணிப்பெண்ணிடம் புகார் அளித்து உள்ளார். இதனிடையே, நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது மூன்று முறை தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று உள்ளார்.
அப்போது, அவரை உட்காரச் சொல்லி பணியில் இருந்தவர்கள் அறிவுறுத்தியபோதும், அவர் மீண்டும் மீண்டும் நின்று கொண்டே இருந்து உள்ளார். பின்னர், விமானம் தரையிறங்கிய பிறகு, இது குறித்து பெங்களூரு சர்வதேச விமான நிலைய காவல் நிலையத்தில் மூத்த விமானப் பணிப்பெண் புகார் அளித்து உள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், அக்ரம் அகமது என்பவரை பெங்களூரு சர்வதேச விமான நிலைய காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும், இவர் பிசினஸ் விசா மூலம் இந்தியாவிற்கு வந்து உள்ளதாக பெங்களூரு வடகிழக்கு பிரிவு டிசிபி லக்ஷ்மி பிரசாத் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க:பள்ளி சிறுமி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை - அதிகாரி மீது போக்சோ வழக்கு!