மாலே : அதிபர் முகமது முய்சு பதிவியேற்பை தொடர்ந்து இந்தியா - மாலத்தீவு இடையிலான நட்புறவில் தொடர் விரிசல் ஏற்பட்டு உள்ளது. பொதுவாகவே இந்திய எதிர்ப்பு அரசியல் கொள்கைகளை கொண்டவரான முகமது முய்சு, தீவு நாடான மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தை வெளியேற்றுவது, இந்தியாவுக்கு முதலிடம் என்கிற கொள்கையை மாற்றுவது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியே அதிபராக வெற்றி பெற்றார்.
தொடர்ந்து சீனாவுடன் கூட்டணி அமைத்து இந்திய எதிர்ப்பு அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். அதிபராக முகமது முய்சு பதவியேற்றதை அடுத்து மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தின் துருப்புகளை வெளியேற உத்தரவிட்டடார். இது தொடர்பான மாலத்தீவு அரசு இரண்டு மாதங்களாக கூறி வரும் நிலையில், மார்ச் 15ஆம் தேதிக்குள் மாலத்தீவை வெளியிட்டு இந்திய ராணுவ துருப்புகள் வெளியேற அதிபர் முகமது முய்சு கெடு விதித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மாலத்தீவு அதிபர் மாளிகை பொது கொள்கை செய்லாளர் அப்துல்லா நசிம் இப்ராஹிம் செய்தியாளர்கள் சந்திப்பில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மார்ச் 15ஆம் தேதிக்குள் இந்தியா அதன் துருப்புகளை வெளியேற்ற வேண்டும் என கெடு விதித்து உள்ளதாக கூறினார். இந்திய ராணுவ அதிகாரிகள் இனி மாலத்தீவில் தங்க முடியாது என்றும், இது அதிபர் முகமது முய்சு எடுத்த நிர்வாக கொள்கை என்றும் அவர் கூறினார்.
முன்னதாக இதுகுறித்து கலந்து ஆலோசிக்க இந்தியா - மாலத்தீவு இடையிலான உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய தூதர் முனு மஹவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அப்போது மாலத்தீவை விட்டு இந்திய படைகள் வெளியேறுமாறு அதிபர் முகமது முய்சு வேண்டுகோள் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த பேச்சுவார்த்தை குறித்து இந்திய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை.