புதுச்சேரி:காலாப்பட்டு தனியார் ரசாயன ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை தர வேண்டும் என மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 4.11.2023 அன்று இரவு காலாப்பட்டில் உள்ள 'சோலாரா ஆக்டிவ் பார்மா (Solora Active Pharma)' என்ற தனியார் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து தீ பிடித்ததில் 14 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 11 பேர் சென்னை தனியார் மருத்துவமனையிலும், 3 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்குறிப்பிட்டுள்ள ரசாயன ஆலை சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. ஆலையின் கழிவுநீர் கடலில் கலப்பதால் கடல்நீர் மாசுபட்டு மீன்வளம் பாதிக்கப்படுகிறது. ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்று மாசை ஏற்படுத்தி மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று வருகிறது. மேலும், அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிரைத் தொடர்ந்து பறித்து வருகிறது. மொத்தத்தில் தொழிலாளர்கள், பொதுமக்கள் உயிருக்குப் பேராபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
1991ஆம் ஆண்டு அங்குள்ள கழிவு நீர் தொட்டியைத் தூய்மைப்படுத்தும் போது மேலாளர் உட்பட 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அப்போதே இந்த ரசாயன ஆலையை நிரந்தரமாக மூட கோரி தொடர் போராட்டம் நடத்தினோம். கடந்த ஜூலை மாதம் இரண்டு தொழிலாளர்கள் இந்த ரசாயன ஆலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர். இது மூடிமறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒவ்வொரு ஆண்டும் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.