ஜார்க்கண்ட்:டெல்லியிலிருந்து புவனேஸ்வர் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று(ஜூன் 6) மாலை ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொகாரோ மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது போஜுதி ரயில் நிலையம் அருகே உள்ள சந்தால்டி ரயில்வே கிராசிங்கில் டிராக்டர் ஒன்று தண்டவாளத்தை கடந்து சென்றது. எதிர்பாராத விதமாக டிராக்டரின் பின்பக்க டயர்கள் ரயில்வே தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது.
அந்த வழியில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்ததால் அச்சமடைந்த ஓட்டுநர் டிராக்டரை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். ரயில் சற்று தொலைவில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் டிராக்டர் நிற்பதை கவனித்த ரயில் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டார். இதனால் ரயில் நின்றது. ரயில் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு பிரேக் போட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்கிழக்கு ரயில்வேயின் ஆத்ரா கோட்ட ரயில்வே மேலாளர் மணீஷ் குமார், "போஜுதி ரயில் நிலையத்தின் சந்தால்டி ரயில்வே கிராசிங்கில் ரயில்வே கேட் மூடும் போது, ஒரு டிராக்டர் ரயில்வே கேட்டில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த டிராக்டர் ரயில் தண்டவாளத்துக்கும் கேட்டிற்கும் இடையே சிக்கிக் கொண்டது. ரயிலின் ஓட்டுநர் சரியான நேரத்தில் பிரேக் போட்டதால், ரயில் நின்று பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது" என்று கூறினார்.