டூல்கிட் வழக்கில், கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி, 22 வயதே ஆன பெங்களூருவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டார். அவருக்கு டெல்லி அமர்வு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மக்களை பாதுகாப்பதிலிருந்து உச்ச நீதிமன்றம் தோல்வி அடையும் போது கீழமை நீதிமன்றம் அவர்களுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டும் என மக்களவையில் தான் பேசியதை சுட்டிக்காட்டிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு பிணை வழங்கிய நீதிபதி ரானாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் போது அவர், "டூல்கிட்டால் எந்த விதமான வன்முறையும் நிகழவில்லை என்பது விசாரணையின்போது தெளிவாக தெரியவந்துள்ளது. அனைத்து ஜனநாயக நாட்டிலும் அரசின் மனசாட்சியாக குடிமக்களே இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. அரசின் கொள்கைகளிலிருந்து மக்கள் வேறுபடும் காரணத்தினாலேயே அவர்களை சிறையில் அடைக்கக் கூடாது" என தெரிவித்திருந்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சிறந்த பேச்சாளர். கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில், பாசிசத்தின் ஏழு அறிகுறிகளை விளக்கி பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.