கோழிக்கோடு:கேரள மாநிலம் கோழிக்கோடு அடுத்த மாஹே பகுதியில் உள்ள கோவிலில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்தனர். கோவிலின் பூட்டை உடைத்து மூன்று பாதுகாப்பு பெட்டகங்களையும் தகர்த்த திருட்டு நடந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா, மானிட்டர். டி.வி.ஆர். பொருட்களை திருடன் உடைத்ததால் அக்கம்பக்க வீடுகளில் இருந்த சிசிடிவி கேமிராக்களை கொண்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரகசிய தகவலின் பேரில் திருட்டில் தொடர்புடைய அர்ஷத் என்பவரை மாஹே ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட அர்ஷத் கோழிக்கோட்டை சேர்ந்தவர் என்றும், பழைய பொருள் வியாபாரி போல் நோட்டமிட்டு வீடுகளில் கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்தது. வீடுகளில் கொள்ளையடித்ததாக 10 வழக்கு அர்ஷத் மீது நிலுவையில் இருப்பதாக போலீசார் கூறினர்.
திருட்டில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கோவிலில் இருந்த 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிசிடிவி கேமிரா, மானிட்டர், டி.வி.ஆர் பொருட்களை உடைத்து கிணற்றில் வீசிய கொள்ளையன் பாதுகாப்பு பெட்டகங்களில் இருந்து 600 ரூபாய் திருடிச் சென்றுள்ளான். சிசிடிவி, மானிட்டர் பொருட்களை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:உதவி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு... விசாரணை ஒத்திவைப்பு