மகாராஷ்ட்ரா:மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தின் நினைவு நாள் நிகழ்ச்சி இன்று(ஆகஸ்ட் 9) ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனும், எழுத்தாளருமான துஷார் காந்தி இன்று காலை தனது வீட்டிலிருந்து புறப்பட்டார். அப்போது, திடீரென அங்கு வந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள துஷார் காந்தி, "சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக ஆகஸ்ட் 9ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளை ஒட்டி, நிகழ்ச்சியில் பங்கேற்க வீட்டை விட்டு புறப்பட்ட நான் சாண்டா குரூஸ் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டேன். இதே நாளில் எனது முன்னோர்கள் பிரிட்டிஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் நானும் கைது செய்யப்பட்டதில் பெருமிதம் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு துஷார் காந்தி காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் வெள்ளையனே வெளியேறு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் தெரிகிறது.