மும்பை :மகாராஷ்டிர அரசியலில் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அறியப்பட்டவர் முரளி தியோரா. இவரது மகன் மிலிண்ட் தியோரா, முன்னாள் மக்களவை எம்.பியாகவும், மகாராஷ்டிரா காங்கிரசில் பொறுப்பிலும் இருந்து வந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறூப்பில் இருந்து விலகுவதாக மிலிண்ட் தியோரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், "இன்று எனது அரசியல் பயணத்தில் குறிப்பிடத்தக்க அத்தியாத்தை நிறைவுக்கு கொண்டு வந்து உள்ளேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். காங்கிரஸ் குடும்பத்தினுடனான எனது 55 ஆண்டுகால உறவு நிறைவுக்கு வருகிறது. இத்தனை ஆண்டுகள் எனக்கு ஆதரவு அளித்து வந்த நண்பர்கள், தன்னார்வலர்கள், தலைவர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டு உள்ளார்.