புனே : மகாராஷ்டிர துணை முதமைச்சர் அஜித் பவார், தனது மாமாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாருடன் ரகசிய சந்திப்பு நடத்தி ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையின் போது பாஜக - ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணியில் சரத் பவார் இணையுமாறு அஜித் பவார் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதேநேரம் அஜித் பவாரின் இந்த தீர்மானத்தை சரத் பவர் நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆதரவு எம்.எல்.ஏக்களை திரட்டிக் கொண்டு ஆளும் பாஜக - ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் கடந்த ஜூலை மாதம் அஜித் பவார் இணைந்தார்.
தொடர்ந்து மகாராஷ்டிர துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அஜித் பவார் மற்றும் அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கு இலாகா ஒதுக்குவதில் தொடர் இழுபறி நீடித்த வந்த நிலையில், ஒருவழியாக இறுதி செய்யப்பட்டது.
துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை ஒதுக்கப்பட்டது. அதேபோல் அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன. குறிப்பாக தனஞ்செய முண்டேவுக்கு விவசாயம், திலீப் வால்சே பாட்டீலுக்கு கூட்டுறவு, ஹசன் முஷ்ரீப் மருத்துவக் கல்வி, அதிதி தாட்கரேவுக்கு பெண்கள் மட்டும் குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டன.