மும்பை : மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாருடன் பதவியேற்றுக் கொண்ட 8 அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்குவது குறித்து துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் உள்பட 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆளும் பாஜக - சிவசேனா கட்சிகளுக்கு ஆதரவு அளித்தனர். மேலும் மகாராஷ்டிர துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து சக்கன் பூஜ்பால், திலீப் வால்ஸே பாட்டில், அதிதி தட்கரே, தனஞ்சய் முண்டே, ஹசன் முஷ்ரிப், ராம்ராஜே நிம்பல்கர், சஞ்சய் பான்ஸோடே, அனில் பாய்தாஸ் பட்டீல் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களின் அதரவு தனக்கு இருப்பதாகவும், தங்கள்து தரப்பே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்றும் அஜித் பவார் தெரிவித்தார். இது தொடர்பாக அஜித் பவார் தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தன்னுடன் பதவியேற்றுக் கொண்ட 8 அமைச்சர்களுக்கும் இலாக்க ஒதுக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அஜித் பவார் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இலாக்கா ஒதுக்கீடு தொடர்பாக துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்து அஜித் பவார் ஆலோசனை நடத்தி வருகிறார்.
துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் அதிகாரப்பூர்வ மாளிகையான மெக்தூத் பங்களாவுக்கு அஜித் பவார், சக்கன் பூஜ்பால் உள்ளிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் சென்ற நிலையில் இலாக்கா ஒதுக்கீடு குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீர்வளம், மின்சாரம் மற்றும் நிதித் துறை அமைச்சராக இதற்கு முன் அஜித் பவார் பதவி வகித்து வந்தார். தற்போது இந்த மூன்று துறைகளும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசிடம் உள்ளது. மேலும் அவர், மாநில உள்துறையையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இதில் ஏதாவது ஒரு துறை அஜித் பவாருக்கு ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதேபோல் மற்ற அமைச்சர்களுக்கும் இலாக்காக்கள் ஒதுக்கீடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :50 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தைக் கழிவறையில் போட்ட பெண்… காரணம் என்ன?