மும்பை: திருமணத்தின்போது புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் வழக்கம், தற்போது திருமணத்திற்கு முன்பும் பின்பும் போட்டோ ஷூட் எனும் பெயரில் பழக்கமாகிப் போனது.
சமீப காலமாகவே புதுமணத் தம்பதிகள் போட்டோ ஷூட் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதற்காக ஆபத்தான, துணிகரச் செயல்களில்கூட அவர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் மரணங்கள் ஏற்படுவதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளன. ஆனால், மணமக்கள் அதை பொருட்படுத்துவதே இல்லை. அப்படி ஒரு சம்பவம் தான் மகாராஷ்டிரா மாநிலத்திலும் அரங்கேறியுள்ளது.
பேனட்டில் அமர்ந்து போட்டோ ஷூட்
மகாராஷ்டிரா மாநிலம் புனேயின் டைவ் காட் (Dive Ghat valley) பள்ளத்தாக்குப் பகுதி மிகவும் அபாயகரமான பகுதியாகும். அங்கு ஓடும் காரின் பேனட் பகுதியில் அமர்ந்து மணப்பெண் ஒருவர் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டுக்காக (pre-wedding photo shoot) போஸ் கொடுக்கிறார்.
பேனட்டில் அமர்ந்து போட்டோ ஷூட் அபாயகரமான முறையில் கவனக்குறைவுடன் செயல்பட்ட அவர்களின் வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து மகாராஷ்டிரா மாநில காவல் துறையினர் அவர்களின்மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மணப்பெண் சுபாங்கி சாந்தாரம் ஜராண்டே, கார் ஓட்டுநர் கணேஷ் ஷாம்ராவ் லாவண்டே, வீடியோகிராஃபர் துக்காராம் சவுதகர் ஷெண்டேஜ் உள்பட பலர் மீது ஐபிசி பிரிவுகளான 269, 188, 269, 107, 336, 34, பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவு, கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாதது உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
லைக்கா? லைஃபா?
ப்ரீ வெட்டிங் ஷூட் என்பது மணமக்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அதற்கும் ஓர் எல்லையுண்டு. ஆபத்துகளை கவனத்தில் கொள்ளாமல் லைக்குகளுக்கு ஆசைப்பட்டு போட்டோ ஷூட்டில் ஈடுபட்டால், அசம்பாவிதங்களும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் எச்சரிக்கையுடன் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:'வேட்டியில் மணமகள்.. வெட்கத்தில் மணமகன்..' - ஆந்திராவில் வினோத திருமணம்