மும்பை: மகாராஷ்டிரா அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் மாதம், 800 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு காஷித் என்ற திருநங்கை விண்ணப்பித்திருந்தார். இந்த தேர்வில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து, மகாராஷ்டிரா அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக்கோரி, காஷித் மகாராஷ்டிரா நிர்வாக தீர்ப்பாயத்தின் மும்பை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவது தொடர்பாக ஆறு மாதங்களில் கொள்கை முடிவு எடுக்க மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.