மஹாராஷ்டிராவை ஆளும் சிவசேனா தலைமையிலான மஹாவிகாஸ் அகாதி கூட்டணிக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார்.
இதனிடையே கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என ஏக்நாத் உட்பட 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சிவனேசா வலியுறுத்திய நிலையில், தகுதி நீக்கம் தொடர்பாக 16 எம்.எல்.ஏக்களுக்கும் துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் நோட்டீஸ் அனுப்பினார்.
இதை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் பார்திவாலா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்கக்கோரியும், தன்னுடன் சேர்த்து 38 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப்பெற்றதால் மஹா விகாஸ் அகாதி கூட்டணிக்கு பெரும்பான்மை இழந்துவிட்டதாகவும் ஏக்நாத் ஷிண்டே குறிப்பிட்டு இருந்தார்.