மும்பை : கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்ற நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் தேர்தல் வியூகங்களை தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஷ் அகாதி கூட்டணி வகுத்து வருகிறது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. ஒட்டுமொத்தமாக உள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.
தென் மாநிலங்களின் திறவுகோலாக இருந்த கர்நாடகாவில் தோல்வியைத் தழுவியது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்து உள்ளது. தென்மாநிலங்களில் ஒன்றில் கூட பாஜக ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் உள்ளது. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாஜகவின் எதிர்ப்பு அலை, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அலையாக மாறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் பாஜகவை ஓரங்கட்டும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் பாலசாகேப் தாக்ரே பிரிவு சிவசேனா கட்சிகள் தலைமையிலான மகா விகாஷ் அகாதி கூட்டணி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மும்பையில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் சில்வர் ஓக் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சரத் பவார், காங்கிரஸ் மேலிட உறுப்பினர்கள், சிவசேனா பாலசாகேப் அணியின் தலைவர் உத்தவ் தாக்ரே ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று உள்ளது.
இந்தக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஹ்ஹான் புஞ்பல் , ஜெயந்த் பாடீல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா படோல், ஜிதேந்திர அவாத், சிவசேனா தாக்ரே அணியைச் சேர்ந்த பாலசாகேப் த்ரோட், அசோக் சவான், சஞ்சய் ராவத், அனில் தேசாய், அரவிந்த் சாவந்த் மற்றும் அனில் பராப் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளிடையே உள்ள கருத்து வேறுபாடுகள், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட முக்கிய கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வியூகங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெற்று உள்ள மகத்தான வெற்றியின் வேகம் குறைவதற்குள் மகாராஷ்டிர மாநிலத்திலும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது குறித்தும், எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :சாதிக்க ஊனம் தடையில்லை.. சிபிஎஸ்இ தேர்வில் சாதித்த ஆசிட் வீச்சால் பார்வையிழந்த மாணவி!