கடந்த சில நாள்களாக குறைந்திருந்த கரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களில்தான் அதிகப்படியான கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநில அரசுகள் கரோனா விதிமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். முகக்கவசம் இல்லாமல் வெளியில் சுற்றுபவர்களிடம், அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், மக்களை நேரடியாகச் சந்தித்து கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
இந்நிலையில், மாணவர்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி கரோனா போரில் வெற்றி பெற உதவி செய்ய வேண்டும் என மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " பள்ளி, கல்லூரிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. கடந்த ஒரு வருடமாக கரோனாவுடன் போராடி வருகிறோம். நிச்சயமாக, இந்தப் போரில் வெற்றிப் பெறுவோம். ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள், கடந்த ஒரு வருடமாக வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலைமை இருந்தது. தற்போது, கரோனா போரில் வெற்றிபெற நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.