மும்பை:மகாராஷ்டிராவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையில் கரோனா பரவும் விகிதம் 17.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக மக்கள் நெருக்கம் அதிகமாக காணப்படும் மும்பை, ராய்கட், தானே உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது.
மகாராஷ்ட்ராவில் ஏற்கனவே BA.2.75, XBB ஆகிய கரோனா வகை பரவி வரும் நிலையில், BA.2.3.20 மற்றும் BQ.1 ஆகிய புதிய வகை ஒமைக்ரான் வைரசும் பரவத் தொடங்கியுள்ளது. தீவிரமாக பரவும் தன்மை கொண்ட BQ.1 ஒமைக்ரான் வைரசின் முதல் பாதிப்பு புனேவில் ஏற்பட்டுள்ளது. இந்த BQ.1 வகை ஒமைக்ரான் மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், எதிர்வரும் குளிர்காலம் மற்றும் பண்டிகை காலங்களில் இந்த கரோனா பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால், இந்த பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், இணை நோய்கள் உள்ள மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் மகாராஷ்ட்ரா அரசு அறிவுறுத்தியுள்ளது.