மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. ’டெல்டா பிளஸ்’ கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தக் கூட்டத் தொடர் இரண்டு நாள்களுக்கு மட்டும் நடைபெறுகிறது.
நேற்று (ஜூலை.04) புதிய வேளாண் சட்டங்களை நிராகரிக்க மகாராஷ்டிர அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இன்றைய கூட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அரசாங்க வேலைகள், கல்வியில் மராட்டியர்களுக்கான ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்திற்கும் அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இவை தவிர, பிற்படுத்தப்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை பேண, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான பிற்படுத்தப்பட்டோர் மக்கள்தொகை குறித்த தரவை வழங்குமாறு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) ஒதுக்கீட்டை முன்னதாக உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், மகாராஷ்டிரா அரசுப் பணிகள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கான நேர்காணல் முன்னதாக கரோனா பரவல் காரணமாக தள்ளிப்போன நிலையில், மன உளைச்சல் காரணமாக 24 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அம்மாநில அமைச்சரவை விவாதித்த நிலையில், சட்டபேரவையிலும் விரிவாக விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:’டெல்லி அரசு vs ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு உள்ள வித்தியாசம்’ - மனிஷ் சிசோடியா