மகாராஷ்டிரா: ஆட்டோ ஓட்டுநர் தன்னுடன் தவறாக பேசியதால் ஓடும் ஆட்டோவை விட்டு பள்ளி மாணவி ஒருவர் கீழே குதித்தச் சம்பவம் நடந்தேறியுள்ளது. இதுகுறித்து கிராண்டி சௌக் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும், மாணவியிடம் வக்கிரமான பேச்சுவார்த்தையைத் தொடங்கிய சையது அக்பர் எனும் ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில், “கடந்த நவ.13ஆம் தேதி இச்சம்பவம் நடந்தேறியது. தனது நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை முடித்து விட்டு வந்த 18 வயதே நிரம்பிய அந்த மாணவி அன்று ஆட்டோவில் தன் வீடு திரும்பவிருந்தார். வழக்கமாக தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் தந்தையும், அண்ணனும் அன்று வராததால் மாணவியே ஆட்டோவில் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநரான சையது அக்பர் தன்னிடம் வக்கிரமான பேச ஆரம்பித்ததும் அதைப் பொருத்துக்கொள்ள முடியாத மாணவி, ஆட்டோவை விட்டு கீழே குதித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.