மதுரை:தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பீகார், ஜார்க்கண்ட் ஆகிய வடமாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். குறிப்பாக திருப்பூரில் செயல்படும் ஆயத்த ஆடை நிறுவனங்களில், பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல், சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் பகிரப்பட்டன.
இது, தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. எனினும், பீகார், ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். போலி வீடியோக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்தார்.
இதற்கிடையே பீகாரில் இருந்து வந்த அதிகாரிகள் குழு, வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர். தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என அவர்களிடம், தமிழக அதிகாரிகள் எடுத்துரைத்தனர். போலி வீடியோக்களை பரப்பிய சிலரை போலீசார் கைது செய்தனர்.