போபால்:மத்திய பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெல்ல வேண்டும். மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடந்த வாக்குப் பதிவில் மொத்தம் 77.51 சதவீத வாக்குகள் பதிவாகின.
அங்கு 4 முறை ஆட்சியில் உள்ள பாஜக 5வது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. பாஜக ஆட்சியை வீழ்த்த காங்கிரஸ் கட்சியும் போட்டிக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தேர்தலை களம் கண்டது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்தி வரும் பாஜக பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. மதியம் 4 மணி நிலவரப்படி, பாஜக 162 இடங்களிலும், காங்கிரஸ் 66 இடங்களிலும், மற்ற கட்சிகள் இரண்டு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் மத்திய பிரதேச முதலைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் தனது 'எக்ஸ்' தளத்தில், "மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி" என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் “ பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களை நடத்தி மக்களின் மனதைக் கவர்ந்தார். இங்கு மத்திய அரசின் திட்டங்களும், மாநில அரசின் திட்டங்களும் மக்களின் இதயங்களை வென்றது. எங்கள் மீது மக்கள் வைத்து இருக்கும் அன்பு எல்லா இடங்களிலும் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
அதே போல் 4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், "நாட்டு மக்கள் தங்கள் மனநிலையை இந்த தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மத்தியப் பிரதேச உள்ளிட்ட 2 மாநிலங்களில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். இங்கு இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படுவதால் இங்கு வளர்ச்சி வேகமாக நடக்கும் என்றார்.
புத்தினி தொகுதியில் சிவராஜ் சிங் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதே போல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் கமல் சிந்த்வாரா தொகுதியில் முன்னிலையில் உள்ளார். இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா முன்னிலை வகித்து வருகிறார்.
தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில் மத்திய பிரதேச காங்கிரஸ் அலுவலகம் முன்பு அடுத்த முதல்வர் கமல்நாத் என பேனர்கள் வைக்கபட்டுள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக வெளிவரும் நிலையில் மாநிலம் முழுவதும் பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:Live Election Results: தெலங்கானாவில் ஆட்சியை இழக்கிறது பிஆர்எஸ்.. ராஜஸ்தானில் பாஜக ஆட்சி..!