ஹைதராபாத்:நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தொலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதே நாளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 20 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது.
இதைத் தொடர்ந்து இன்று (நவ.17) ஆம் தேதி சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டமாக 70 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், இரு மாநிலங்களிலும் ஒரு சில இடங்களில் சிறுசிறு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.
குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் ஐடிபிபி இந்தோ திபேதியன் எல்லை காவலர் ஒருவர் உயிரிழந்தது வாக்குப்பதிவின் போது பதற்றத்தை ஏற்படுத்தியது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் துரித நடவடிக்கைகளால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிரிழந்தவர் தலைமைக் காவலரான ஜோகிந்தர் சிங் என்று தெரிய வந்துள்ளது.