தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி! - அக்சர்தாம் கோயில்

delhi rajghat: டெல்லி ஜி20 மாநாட்டில் பங்கேற்று உள்ள உலக நாடுகளின் தலைவர்கள், ராஜ்காட் பகுதியில் அமைந்து உள்ள மகாத்மா காந்தி நினைவகத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

டெல்லி ராஜ்காட்
டெல்லி ராஜ்காட்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 2:46 PM IST

டெல்லி :உலகத்தின் பார்வையே தற்போது இந்தியாவை நோக்கித்தான் உள்ளது என்பதை மெய்ப்பிக்கும் வகையில்; தலைநகர் டெல்லியில், ஜி20 நாடுகளின் 18வது உச்சி மாநாட்டை, இந்தியா,நேற்று (செப்டம்பர் 9ஆம் தேதி) முதல் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. நேற்று துவங்கிய இந்த மாநாடு, இன்றும் தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் இங்கிலாந்து உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.

ஜி20 மாநாட்டின் இன்றைய இரண்டாம் நாள் நிகழ்வாக, ஜி20 நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவைகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த உச்சி மாநாட்டில் ஒரே பூமி, ஒரே குடும்பம் என்ற இரு வேறு தலைப்புகளில் இரண்டு கட்டங்களாக ஆலோசனைகள் நடைபெற உள்ளன.

ராஜ்காட்டில் உலக நாடுகளின் தலைவர்கள்:ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பர் 10ஆம் தேதி) காலை, பிரதமர் நரேந்திர மோடி, உலக நாடுகளின் தலைவர்களுக்கு கதர் சால்வை அணிவித்து, ராஜ்காட் பகுதியில் அமைந்து உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்றார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ, ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடா, தென் கொரிய அதிபர் யோன் சுக் இயோல், ஜெர்மனி சாஞ்சலர் ஓலாப் ஸ்கோல்ஜ், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜே லாவ்ரோவ், துருக்கி அதிபர் ரெசெப் தய்யீப் எர்டாகன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள், டெல்லி ராஜ்காட் பகுதியில் அமைந்து உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அமைதி மற்றும் அகிம்சையை ஆயுதமாகக் கொண்டு வெற்றி பெற்ற மகாத்மா காந்தியை போற்றும் வகையில், பிரதமர் மோடி, உலகத்தலைவர்களை கொண்டு, இந்த அஞ்சலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து உள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குவாட்டோரஸ், சர்வதேச வங்கியின் தலைவர் அஜய் பங்கா, உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் உள்ளிட்டோர், மகாத்மா காந்தியின் சிறப்பை எடுத்துரைத்து உள்ளனர்.

தலைநகர் டெல்லியில் நேற்று துவங்கிய ஜி20 நாடுகளின் 18வது உச்சி மாநாட்டின் முதல் நாளில், டெல்லி ஜி20 கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்த பிரகடனத்தை. ஜி20 அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொண்டு உள்ளன. இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் ரயில் மற்றும் துறைமுக இணைப்பு கட்டமைப்பை துவங்குதல், சர்வதேச அளவிலான உயிரி எரிபொருள் கூட்டணியின் தொடக்கம் மற்றும் சர்வதேச அளவில் நிலவும் நம்பிக்கையின்மை நிகழ்விற்கு, மனிதநேய அணுகுமுறையை கடைப்பிடிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள், அன்றைய நாளில் எடுக்கப்பட்டு உள்ளன.

ராஜ்காட்டில் அமைந்து உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அதன்பின்னர் டெல்லி அக்சர்தாம் கோயிலில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜி20 விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின்.. அமெரிக்க அதிபருடன் கலந்துரையாடல்!

ABOUT THE AUTHOR

...view details