மேற்குவங்கம்: இந்தியாவில் கடந்த ஆண்டு குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் ஏற்பட்டது. 'லம்பி' என்ற வைரஸ் தாக்குதலால் இந்த தோல் நோய் ஏற்பட்டது. இதனால், கால்நடைகளுக்கு கால்களில் வீக்கம், தோலில் கட்டிகள் ஏற்பட்டன. இந்த நோயின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. குறிப்பாக பசு மாடுகள் இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டன. நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் கால்நடைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டதாக மத்திய கால்நடை பராமரிப்புத்துறைத் தகவல் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் 14 கால்நடைகளுக்குத் தோல் கழலை நோய்!
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மேற்குவங்க மாநிலத்தில் லம்பி வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக டார்ஜிலிங், கலிம்போங் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் டார்ஜிலிங்கில் 400 கால்நடைகளும், கலிம்போங்கில் 2,000 கால்நடைகளும் லம்பி வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன.
அதில் 36-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளன. அதேநேரம், கால்நடைகளை குணப்படுத்தும் பணிகளிலும் மாவட்ட நிர்வாகங்கள் கவனம் செலுத்தியதால், டார்ஜிலிங்கில் 200 கால்நடைகளும், கலிம்போங்கில் 1,200 கால்நடைகளும் குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து லம்பி வைரஸ் பரவி வருகிறது. மாடுகள் மட்டுமல்லாமல் ஆடுகளும் இந்த தோல் நோயால் பாதிக்கப்படுகின்றன. டார்ஜிலிங்கில் சுகியாபோக்ரி, ரிம்பிக், லோதாமா மற்றும் பிஜன்பரி ஆகிய இடங்களில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் இந்த லம்பி வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள நிபுணர் குழுவை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நோய்த் தாக்குதலுக்காக தடுப்பூசி செலுத்துவதற்காக மாநில அரசுக்கு ஒன்றரை கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய கால்நடை மேம்பாட்டுத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா தெரிவித்தார்.