புதுச்சேரி: வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் வேளாண் விழா 2023 மற்றும் 33ஆவது கனி, காய் மற்றும் மலர் கண்காட்சி, முதலியார்பேட்டை AFT மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமாக நேற்று (பிப்.10) தொடங்கியது. 12ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியைப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த கண்காட்சியில் பூக்களால் ஆன டால்பின், சிட்டுக்குருவி, மைனா, மயில், பென்குயின், சிங்கம், பூக்களால் நீர் ஊற்று, யானை மற்றும் நவதானியங்களில் புதுச்சேரியில் புகழ்பெற்ற ஆயி மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 15,000 அலங்காரத்தழை மற்றும் மலர்ச் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் 35,000 எண்ணிக்கையில் அடங்கிய சால்வியா, சாமந்தி, சினியா, பெட்டுன்னியா, டொரேன்னியா, காலன்டுலா, டையான்தஸ் மற்றும் தாலியா போன்ற மலர்ச் செடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதே போன்று மூலிகை செடிகளான பேய் விரட்டி, திப்பிலி, சோற்றுக்கற்றாழை, யானை திப்பிலி, பின்னை, மருதாணி, காட்டுத் துளசி, திருநீற்றுப் பச்சிலை, குட்டி பலா, கருஊமத்தை, காட்டு வெற்றிலை, தவசி கீரை, உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.
திராட்சையால் உருவாக்கப்பட்ட காளைமாடுகள், தர்பூசணியில் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி, பாரதியார், அப்துல் கலாம், அன்னை தெரசா, நரேந்திர மோடி, மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை, அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் உருவங்களும் வைக்கப்பட்டிருந்தது.