டெல்லி:நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள குருவிக்காரர்கள் மற்றும் நரிக்குறவர்கள் இன மக்களை பழங்குடியினர் (எஸ்.டி) பிரிவில் சேர்க்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தங்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்கக்கோரி தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் இன மக்கள் சட்டப் போராட்டம் நடத்தி வந்தனர். பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர் மற்ரும் குருவிக்காரர் இன மக்களை இணைக்கக்கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசின் பரிந்துரை மற்றும் இந்தியத் தலைமைப் பதிவாளர், மற்றும் தேசிய பழங்குடியின மக்களுக்கான ஆணையம் ஆகியோரின் பரிந்துரையை அடுத்து, அரசியலமைப்புச் சட்டத்தின் 15-வது பிரிவில் திருத்தம் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டதாக மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.