இரு மனங்களின் இணைப்பு பாலமாக திகழும் காதலர் தினத்தில், காதலர்கள் ஒருவருக்கொருவர்க் காதலின் ஆழத்தைப் பரிசுகள் மூலம் வெளிப்படுத்துவார்கள். சிறிய கிரீட்டிங் கார்டில் வழங்குவதில் மலரும் காதல், தற்போது டெலஸ்கோப் மூலம் பார்க்கும் நட்சத்திரத்தை வாங்கும் வரைக்கும் செல்லும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆம், காதலிக்காக நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியது மட்டுமின்றி ஒரு நட்சத்திரத்தை வாங்கி அதற்குக் காதலியின் பெயரையும் சூட்டியுள்ளார் இந்தூரைச் சேர்ந்த காதலர் ஒருவர்.
நிலாவில் இன்ப சுற்றுலா செல்வேன்
இந்தூரை சேர்ந்த பலாஷ், தற்போது துபாயில் ஃப்ரீ லாஞ்சிங் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது வருங்கால மனைவி ஆஷனா மந்தன் ஹைதராபாத்தில் வசிக்கிறார். இந்நிலையில் காதலர் தினத்தில், அவரை சர்ப்ரைஸ் செய்ய நினைத்த பலாஷ், சர்வதேச லூனார் லேண்ட் நிறுவனம் மூலம் ஒரு ஏக்கர் நிலத்தை நிலாவில் வாங்கியுள்ளார்.
இதுமட்டுமின்றி, நட்சத்திரத்தை வாங்கி, அதற்கு ஆஷனா மந்தன் எனப் பெயர் சூட்டியுள்ளார். தற்போது, விஞ்ஞானம் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வருவதால், ஒரு நாள் நிச்சயம் மனைவியுடன் நிலாவில் உள்ள தனது நிலத்தில் கால் பதிப்பேன் எனக் கூறுகிறார்.