நாட்டின் சுகாதாரத் துறையில் 80 விழுக்காட்டுப் பங்கை வகிக்கும் மருத்துவமனைத் தொழில் ஒவ்வொரு ஆண்டும் 16 விழுக்காடு முதல் 17 விழுக்காடு வரையிலான வளர்ச்சியைக் காண்கிறது என்று நிதி ஆயோக்கின் அறிக்கை தெரிவித்திருக்கிறது.
இன்னும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவமனைத் தொழில் துறை 13,200 கோடி டாலர் மதிப்புகொண்ட உன்னத நிலையை எட்டிவிடும் என்றும் அந்த அறிக்கைச் சொல்கிறது. மருந்துத் துறையின் வளர்ச்சியையும், மருத்துவ உபகரணத் துறையின் வளர்ச்சியையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஒட்டுமொத்த மருத்துவச் சேவைத் துறை அடுத்த ஆண்டிற்குள் ரூபாய் 27 லட்ச கோடி மதிப்புள்ள அந்தஸ்தை அடைந்துவிடும் என்று நிதி ஆயோக் அறிவித்திருக்கிறது.
மேலும் இந்தத் துறை பெரிய அளவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் என்ற ஓர் ஆக்கபூர்வமான சித்திரத்தை நிதி ஆயோக் முன்வைக்கிறது. சுகாதாரக் காப்பீடு, சுகாதாரச் சுற்றுலா, தொலைபேசி மருத்துவம், தொழில்நுட்ப அடிப்படையிலான மருத்துவச் சேவைகள், அவற்றோடு தொடர்புடைய மற்றத் துறைகள் எல்லாம் 2017-2022 காலக்கட்டத்தில் மேலும் 27 லட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வண்ணம் ஒன்றுபோல வளரும் என்றும் அது கூறியிருக்கிறது.
நாட்டின் மருத்துவமனைப் படுக்கைகளில் 65 விழுக்காடு கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருக்கின்றன என்று சொல்லும் நிதி ஆயோக், மிச்சமிருக்கும் மாநிலங்களில் மருத்துவமனைப் படுக்கைகளின் எண்ணிக்கையைக் குறைந்தபட்சம் 30 விழுக்காடு உயர்த்துவதற்கு வாய்ப்பு உள்ளது என்கிறது.
மருத்துவமனைச் செலவுகளுக்காக கொள்ளை கொள்ளையாய்ப் பணத்தைச் இறைத்துவிட்டு ஆண்டுதோறும் வறுமைக்குள் விழும் ஆறுகோடி மக்களைக் கொண்டது நமது தேசம். நோய்களில் 90 விழுக்காடு அடையாளம் கண்டு அவற்றை ஆரம்பச் சுகாதார நிலையங்களிலேயே குணமாக்கிவிட முடியும் என்று சொன்ன உலக வங்கியின் கருத்தோட்டத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், ஐயகோ! அந்தக் கருத்து எப்போதும் நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதன் விளைவாக, ஆரோக்கியம், சுகாதாரம் என்ற சேவைகள் எல்லாம் பணக்காரர்களின் சிறப்புரிமையாகிச் சீரழிந்துவிட்டன.
கோவிட்-19 போன்ற கொடுமையான தீநுண்மி நோய்கள் வீரியத்துடன் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினையான வேளையில், அரசாங்கங்கள் பாமர மனிதனுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு அளித்தே தீர வேண்டும். ஆனால் சோதனையும், வேதனையும் மிக்க இந்தக் காலக்கட்டத்தில் ஆள்வோர்களின் மனப்பாங்கை நினைத்தால் குலைநடுங்குகிறது.
மனித வளங்களைத் திறனுடன் பயன்படுத்துவது என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் அதிமுக்கியமான அம்சம் ஆகும். தனிமனிதர்களை, முன்னேறிக் கொண்டிருக்கிற, பிரயோஜனமான ஆக்கப்பூர்வமான செல்வங்களாக, வளங்களாகப் பேணி வளர்த்தெடுக்கக் கல்வி, சுகாதாரம் ஆகிய இரண்டு காரணிகள் மிக மிக அவசியம்.