ஹைதராபாத்: ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டுகிறார்கள். பெண் குழந்தைகள் என்று வரும்போது, அவர்களின் தேவை மேலும் அதிகரிக்கிறது. ஒரு தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் என்றால், அவர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க மாதம் ஒன்றுக்கு ரூ.10,000 வரை முதலீடு செய்ய விரும்பினால், என்னென்ன சிறந்த வழிகள் உள்ளன என்பதை அவர்கள் அறிந்துகொள்வது அவசியம்.
பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை வழங்குவதற்கு எதிர்கால நிதி தேவைகளுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பெற்றோரின் ஆண்டு வருமானத்தில் குறைந்தது 10 மடங்கு தொகை கிடைக்கும் வகையில் டேர்ம் இன்ஷூரன்ஸ் செய்து கொள்வது அவசியம். அதாவது ஆண்டுக்கு 5 லட்சம் சம்பளம் பெறும் ஒருவர், திடீரென இறக்க நேரிட்டாலோ , வருவாய் இழந்தாலோ குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் கிடைக்கும் வகையில் பாலிசியை தேர்ந்தெடுத்து காப்பீடு செய்ய வேண்டும்.
மேலும் பெண் குழந்தைகளுக்காக சிறப்பான திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana - SSY) என்னும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் ரூ.3 ஆயிரம் வரை முதலீடு செய்யுங்கள். பெண் குழந்தைகளுக்காக சேமிப்பதற்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த திட்டம் ஆகும். மீதமுள்ள ரூ.7 ஆயிரம் ரூபாயை பலதரப்பட்ட ஈக்விட்டி ஃபண்டுகளில் அடுக்கு முதலீட்டு உத்தியில் முதலீடு செய்யுங்கள்.
மேலும் உங்களால் முடியும் போதெல்லாம் இந்த முதலீட்டுத் தொகையை நீங்கள் அதிகரிக்கவும் செய்யலாம். நீங்கள் 15 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் முதலீடு செய்து வந்தால், சராசரியாக உங்களது முதலீட்டுத் தொகை 12 சதவீதம் வட்டியுடன் முதிர்ச்சி அடைந்து ரூ.44,73,565ஆக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.