டெல்லி : நடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ 19 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், தபால் நிலைய மசோதா, காஷ்மீர் இடஒதுக்கீடு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இந்நிலையில், இன்று (டிச. 8) மக்களவை கூடிய நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் அதானி நிறுவனம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பணம் வாங்கியதாக, பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே புகார் எழுப்பினார்.
இது தொடர்பாக மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய ஒழுங்கு நடவடிக்கை குழு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது.