டெல்லி:நாடாளுமன்றத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் நினைவு நாளன்றே, மீண்டும் அதுபோன்ற ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் நேற்று நடந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதன் பத்தாவது நாளான நேற்று, பார்வையாளர் மாடத்தில் இருந்து இருவர் திடீரென உள்ளே குதித்து, உறுப்பினர்களின் மேசைகள் மீது தாவி ஓடிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த குப்பிகளில் இருந்த மஞ்சள் நிற புகையை வெளியேற்றியபடி கோஷங்களை எழுப்பினர். இதனை எதிர்பாராத உறுப்பினர்கள் சிலர், அவர்களை ஓடிச் சென்று பிடித்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இது ஒருபுறம் நடக்க, நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு பெண் உள்பட இருவர் அதே போல குப்பிகளில் இருந்த நிறங்கள் அடங்கிய புகையை வெளியேற்றி, கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்களையும் காவல் துறையினர் பிடித்தனர்.
இந்நிலையில், 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் நினைவு நாளன்றே, மீண்டும் இது போன்ற ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் நடந்ததை கண்டித்து, மக்களவையில் எதிர்கட்சி எம்.பிக்கள் கோஷங்கள் எழுப்பியதால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என எதிர்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், “நேற்று சபையில் நடந்தது பற்றி நாம் அனைவரும் அக்கறை கொண்டுள்ளோம். சபையின் பாதுகாப்பானது மக்களவை செயலகத்தின் பொறுப்பாகும்” என கூறினார். மேலும் இது குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், “இது உளவுத்துறையின் தோல்வி, இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்கு பதிலளிக்க வேண்டும்.
டெல்லி காவல்துறை மற்றும் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்த சம்பவம் குறித்து அவர் பதிலளிக்க வேண்டும். இந்த பொறுப்பில் இருந்து அவர் தப்ப முடியாது. பாஜக எம்பி சிம்ஹா இந்த குற்றவாளிகளுக்கு பாஸ்களை வழங்கியுள்ளார். இந்த சம்பவத்துக்கு பின்னால் பெரிய சதி உள்ளது, அவரை தண்டிக்காமல் விடக்கூடாது” என கூறியுள்ளார்.