டெல்லி: 'மோடி' சமூகத்தினர் மீது அவதூறு கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் கடந்த 4ஆம் தேதி உத்தரவிட்டு இருந்தது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு இருந்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உள்ளதால், அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். அதுமட்டுமல்லது, இதுதொடர்பாக, மக்களவை செயலகத்திலும் மனு அளிக்கப்பட்டு இருந்தது.
எதிர்கட்சிகள், ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை நீக்கம் செய்யும் போது காட்டிய வேகத்தை மத்திய அரசு திரும்ப பெறும் விவகாரத்தில் காட்டவில்லை என்று தொடர்ந்து விமர்சித்து வந்தன. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தியைக் கண்டு, மத்திய அரசு பயப்படுவதாக, கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.