தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Lok Sabha adjourned : மக்களவை தொடர் முடக்கம்... சபாநாயகர் காட்டம்! - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவை என்பது கோஷம் எழுப்புவதற்கான இடம் இல்லை என்றும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்துக் கூடிய இடம் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

Parliament
Parliament

By

Published : Aug 7, 2023, 1:41 PM IST

டெல்லி : நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முன்கூட்டியே விவாதம், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் விளக்கம் என எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மதியம் 2 மணி வரை முடங்கியது.

மணிப்பூர் கலவரம் குறித்தும் குக்கி இனத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது குறித்தும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல், மணிப்பூர் விவகாரம் குறித்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருந்தார். இருப்பினும் அதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் இறுதி வாரத்தை எட்டி உள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட். 7) வழக்கம் போல் மக்களவை கூடியது. கூட்டம் தொடங்கியதுமே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியை தொடர்ந்து 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை ஒத்திவைத்தார்.

12 மணிக்கு மக்களவை மீண்டும் கூடிய நிலையில், மத்திய அரசின் மீது தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்கூட்டியே விவாதிக்க கோரியும், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரியும் எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் மீண்டும் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து மக்களவையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். முன்னதாக மக்களவையை அமைதியான முறையில் நடத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரும்பவில்லையா என்று சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி எழுப்பினார். மேலும் அவை என்பது கோஷம் எழுப்புவதற்கான இடம் இல்லை என்றும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்துக் கூடியது என்றும் ஓம் பிர்லா தெரிவித்தார்.

வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் நிறைவு பெற உள்ள நிலையில், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மோடி அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில், நாளை (ஆகஸ்ட். 7) நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் அவர் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :மாநிலங்களவை அமளியை வீடியோ எடுத்த விவகாரம்.. காங்கிரஸ் பெண் எம்.பி. இடைநீக்கம் ரத்து!

ABOUT THE AUTHOR

...view details