பெங்களூரு: தேவை ஏற்படும்பட்சத்தில் கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
"மக்கள் தங்களது உடல் நிலையைத் தாங்கள் தான் கவனமாக இருந்து பார்த்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு கவனமாக பார்க்கவில்லையென்றால், நாங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும். தேவை இருக்கும்பட்சத்தில், நாங்கள் முழு ஊரடங்கினை அமல்படுத்த நேரிடும்" என பிடர் என்னும் ஊரில் எடியூரப்பா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய(ஏப்ரல் 11) நிலவரப்படி, சுமார் 10,250 பேர் கர்நாடகாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து எடியூரப்பா பிரதமர் மோடியிடம் பேசுகையில், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இரவு நேரங்களில் முழு ஊரடங்கு அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படுகிறது என்றும் கூறினார்.
மேலும் அவர் மக்கள் அனைவரும் முகக்கவசங்களை அணியவும், சானிடைசரைப் பயன்படுத்தவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, கர்நாடக மாநிலத்திற்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும் அணியினர் ஊரடங்கிற்குப் பரிந்துரைத்தபோது, அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா கரோனா இரண்டாம் அலையில் இருந்து தப்ப மக்களைப் பாதுகாப்பாக இருக்க மீண்டும் எச்சரித்தார்.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் கே. சுதாகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’மக்கள் ஒத்துழைப்பு நல்கினால் அரசு முழு ஊரடங்கைப் போடாது’ என்றும் கூறியுள்ளார்.
மேலும் சுதாகர், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முக்கிய நகரங்கள், மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பிற நகரப்பகுதிகளில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை இரவு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவை வெல்வதற்கு இதெல்லாம் உதவாது - சிதம்பரம் விமர்சனம்