தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுச்சேரி: விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என இன்று (மார்ச் 26) வெளியிடப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, Puducherry, Puducherry BJP Election manifesto, புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், Union Finance minister Nirmala Seetharaman
local-elections-in-pondicherry-will-be-conducted-soon-promised-in-bjp-election-manifesto

By

Published : Mar 26, 2021, 5:05 PM IST

புதுச்சேரிக்கான தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர், 'உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி' என்ற தலைப்பில் 50,000 பேரிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.

தேர்தல் அறிக்கை நிகழ்ச்சியை விளக்கேற்றி தொடங்கிவைத்த நிர்மலா சீதாராமன்

தனியார் விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத் துறை அமைச்சர் கிரிராஜ்சிங், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால், பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் நிர்மல் குமார் சுரானா, ராஜீவ் சந்திரசேகர் எம்பி, புதுச்சேரி தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், பாஜக வேட்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

மொத்தம் 117 வாக்குறுதிகள் புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையின் முக்கிய வாக்குறுதிகள், கீழ்வருமாறு:

  • 2 ஆண்டிற்குள் சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.
  • உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும்.
  • உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்படும்.
  • தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.
  • மாபெரும் ஆடை உற்பத்தி தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.
  • ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை பெண்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படும்.
  • உயர்நிலை மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
  • ராணுவப்பள்ளி தொடங்கப்படும்.
  • 9ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு டிஜிட்டல் டேப்லெட் அளிக்கப்படும்.
  • மகாகவி பாரதிக்கு 150 அடியில் சிலை அமைக்கப்படும்.
  • 2.5 லட்சம் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
  • புதுச்சேரியில் அனைவருக்கும் 100 விழுக்காடு பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • அனைத்து உழவர்களுக்கும் ரூ.2000 உதவித்தொகை பிரதமரின் உழவர் நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும்.
  • மீனவர்களுக்கு நவீன வீடுகள் கட்டித்தரப்படும்.
  • மீன்பிடி கப்பல்களுக்கு 11 லட்சம் ரூபாய் வரை மானியம் அளிக்கப்படும்.
  • அனைத்து மீனவர்களுக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை உதவித்தொகை அளிக்கப்படும்.
  • மீன்பிடித் தடைக்காலம் நிவாரணம் ஐந்தாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை உயர்த்தப்படும்.
  • மூடப்பட்ட நூற்பாலைகள், பஞ்சாலைகள், கூட்டுறவு ஆலைகள் ஆகியவற்றைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாஜக வெளியிட்டுள்ள புதுச்சேரி தேர்தல் அறிக்கையில் தனிமாநில அந்தஸ்து கோரிக்கை இடம்பெறவில்லை. பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனிமாநில அந்தஸ்து கோரிக்கையைப் பிரதானமாக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கும் நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையில் தனிமாநில அந்தஸ்து வாக்குறுதி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மற்ற மாநிலங்கள்போல புதுச்சேரி முன்னேற வேண்டும் என்ற ஆசை பிரதமருக்கு உள்ளது. அதனால்தான் என்னை புதுச்சேரிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

மத்தியிலும் பாஜக, மாநிலத்திலும் பாஜக ஆட்சி வர வேண்டும். அப்படி வந்தால்தான் தடைபட்டுவந்த நிலைமாறி, முழு வேகத்தில் முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

தொண்டர்கள் தளர்ச்சியடையாமல் வீடு வீடாகச் சென்று தேர்தல் அறிக்கையை எடுத்துக்கூறி ஏன் தாமரை மலர வேண்டும் எனப் பரப்புரை செய்ய வேண்டும். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால்தான் புதுச்சேரியின் தனித்தன்மை மேம்பாடு அடையும்" என்றார்.

இதையும் படிங்க:அதிமுக பிட் நோட்டீஸ், குஷ்புவின் ட்விட்டர் - காணாமல் போன மோடி

ABOUT THE AUTHOR

...view details