பிகார் அரசியலில் இன்று(ஜூன்.14) திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள லோக் ஜனசக்தி கட்சியில், தலைவர் சிராக் பாஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஐந்து எம்.பி.க்கள் கட்சியை விட்டு விலகியுள்ளனர்.
பாஸ்வான் கட்சியில் பிளவு
லோக் ஜனசக்தி கட்சியைத் தோற்றுவித்த தலைவரான ராம் விலாஸ் பாஸ்வான், கடந்தாண்டு உயிரிழந்தார். ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்குப் பின்னர், அவரது மகன் சிராக் பாஸ்வான் கட்சித் தலைமையை ஏற்ற நிலையில், அவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிகார் முதலமைச்சருமான நிதீஷ் குமாருடன் மோதல் போக்கைக் கடைபிடித்தார்.
இதன் காரணமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி, கடந்த 2019 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம் கண்டார். தேர்தலில், லோக் ஜனசக்தி கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், தற்போது கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.