பீகார்: கயா பகுதியில் பட்டப்பகலில் மர்ம நபர்களால் எல்ஜேபி (R) தலைவர் அன்வர்கான் கொலை செய்யப்பட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமாஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிஹுலி கிராமத்தில் அன்வர் வசித்து வந்தார். 2015 ஆம் ஆண்டு ஜனதா தளத்திலிருந்து கெருவா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, சிராக் பாஸ்வானின் எல்ஜேபி (ஆர்) கட்சியில் உறுப்பினராக இருந்தார். சம்பவத்தன்று அன்வர்கான், சலூன் கடைக்கு தன் மகனுடன் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அன்வர் அலியை சராமாரியாக அவரது மகன் முன்பே சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதில் நிலை தடுமாறிய அன்வர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கொலை செய்யப்பட்ட முகம்மது அன்வர்கானின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் நிறைந்த பகுதியில் அரங்கேறியதால், அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, பதிவு எண் இல்லாத மோட்டர் பைக்குகளில் வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள், சலூன் கடைக்குள் தன் மகனுடன் இருந்த அன்வர்கானை சராமாரியாக சுடத்தொடங்கினர். இதில் பலத்த காயமடைந்த அன்வர்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை சம்பவத்தால் திகைத்து ஓடி ஒழிந்தவர் ஒருவரை மிரட்டியதோடு, அவரின் மோட்டார் பைக்கையும் வழிப்பறி செய்துவிட்டு தப்பித்துச் சென்றனர்" என அங்கிருந்த பொதுமக்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.