கோர்பா : சத்தீஸ்கரில் வாயில் பல்லியுடன் இரண்டரை வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாயில் பல்லி சென்றதால் சிறுவன் உயிரிழந்தானா அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நகின்பந்தா பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் சந்தே. இவரது மூன்றாவது மகன் ஜெகதீஷ். இரண்டரை வயதான ஜெகதீஷ் சம்பவத்தன்று தூங்கிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தூங்கிக் கொண்டு இருந்த ஜெகதீசை விட்டு விட்டு அவரது தாய் மற்ற வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்து உள்ளார். சிறிது நேரம் கழித்து தூங்கிக் கொண்டு இருந்த மகன் ஜெகதீசை பார்த்த போது அசைவின்றி கிடந்ததாக கூறப்படுகிறது.
உற்று நோக்கி பார்த்த போது ஜெகதீஷ் வாயில் பல்லி இருந்ததாக கூறப்படுகிறது. மகன் அசைவின்றி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ந்து போன அவரது தாய் உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். சம்பவம் குறித்து நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார், ஜெகதீசின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.