கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் இரவு 9.01 மணி நிலவரப்படி, 136 இடங்களில் நின்ற காங்கிரஸ் 134 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. மேலும், 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல, 65 இடங்களில் பாஜக 64 இடங்களில் வெற்றிபெற்றது. மேலும் 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது.
Karnataka Result Live Update:'கர்நாடக தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்' - பிரதமர் மோடி
21:02 May 13
134 தொகுதிகளில் வெற்றி பெற்று பலத்தை நிரூபித்த காங்கிரஸ்!
19:16 May 13
224-க்கு 131 தொகுதிகளில் வாகை சூடிய காங்கிரஸ்!
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் மாலை 7.12 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 131 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. மேலும், 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
18:59 May 13
பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் காங்கிரஸார் கொண்டாட்டம்!
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி இமாலய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் அக்கட்சியின் தொண்டர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
18:45 May 13
ஹிஜாப்-க்கு தடைக்கு காரணமானவர் தோல்வி
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடையை கொண்டு வந்த பாஜகவின் கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ், திப்தூர் தொகுதியில் 17,662 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
18:01 May 13
கர்நாடகாவில் 126 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி!
கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 126 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
17:51 May 13
34 ஆண்டுகளுக்குப் பின் கர்நாடகாவில் காங்கிரஸ் சாதனை!
34 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகாவில் அதிக இடங்களில் அதிக வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் சாதனைப் படைத்துள்ளது. 136 இடங்களில் காங்கிரஸின் வெற்றி உறுதியாகியுள்ளது. தற்போது பெற்ற வாக்குகளும் 43 சதவீதத்தைக் கடந்துள்ளது. 1989ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 43.7 சதவீத வாக்குகளுடன் 178 இடங்களில் வென்று ஆட்சியமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
17:43 May 13
121 தொகுதிகளில் வாகை சூடிய காங்கிரஸ்!
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் தற்போதைய நிலவரப்படி, 136 இடங்களில் நின்ற காங்கிரஸ் 121 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. மேலும், 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல, 64 இடங்களில் பாஜக 56 இடங்களில் வெற்றிபெற்றது. மேலும் 8 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இவை தவிர, 20 இடங்களில் மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிட்ட நிலையில், 18 இடங்களில் வெற்றிபெற்று 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
17:26 May 13
Karnataka Result Live Update:'கர்நாடக தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்' - பிரதமர் மோடி
"கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். கர்நாடக தேர்தலில் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக காரியகர்த்தாக்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். இனி வரும் காலங்களில் கர்நாடகாவிற்கு இன்னும் பலத்துடன் சேவை செய்வோம்" என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கர்நாடக காங்கிரஸின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17:17 May 13
'பழிவாங்கும் பாஜகவின் அரசியலுக்குத் தக்க பாடம் இது' - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
"பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்திக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
17:07 May 13
114 தொகுதிகளை சொந்தமாக்கிய கர்நாடக காங்கிரஸ்!
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் தற்போதைய நிலவரப்படி, 136 இடங்களில் நின்ற காங்கிரஸ் 114 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. மேலும், 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல, 64 இடங்களில் பாஜக 50 இடங்களில் வெற்றிபெற்றது. மேலும் 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இவை தவிர, 20 இடங்களில் மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிட்ட நிலையில், 17 இடங்களில் வெற்றிபெற்று 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
16:56 May 13
'வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றியின் விதத்திற்கும் பாராட்டுக்கள்!' - கமல்ஹாசன்
"பிரிவினையை நிராகரிக்க கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக பதிலடி கொடுத்தனர். வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றியின் விதத்திற்கும் பாராட்டுக்கள்!" - ராகுல் காந்திக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16:50 May 13
106 தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ்!
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் தற்போதைய நிலவரப்படி, 136 இடங்களில் நின்ற காங்கிரஸ் 106 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. மேலும், 30 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல, 64 இடங்களில் பாஜக 50 இடங்களில் வெற்றிபெற்றது. மேலும் 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இவை தவிர, 20 இடங்களில் மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிட்ட நிலையில், 16 இடங்களில் வெற்றிபெற்று 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
16:41 May 13
'இந்த பின்னடைவை மக்களின் தீர்ப்பாக ஏற்கிறோம்' - வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் சி.என்.அஸ்வத்நாராயணன்
'கர்நாடகாவில் இது எங்களுக்கு பின்னடைவு ஆனபோதிலும், மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். மேலும், வலுவாக செயல்பட்டு மக்களின் ஆசியை பெறுவோம். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில், 28 தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வோம்' என மல்லேஸ்வரம் தொகுதியில் வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் சி.என்.அஸ்வத்நாராயணன் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.
16:24 May 13
101 இடங்களில் அபார வெற்றிபெற்ற காங்கிரஸ்!
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் தற்போதைய நிலவரப்படி, 136 இடங்களில் நின்ற காங்கிரஸ் 101 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. மேலும், 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல, 64 இடங்களில் பாஜக 45 இடங்களில் வெற்றிபெற்றது. மேலும் 19 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இவை தவிர, 20 இடங்களில் மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிட்ட நிலையில், 16 இடங்களில் வெற்றிபெற்று 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
16:20 May 13
கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடிய மல்லிகாராஜுன கார்கே!
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகாராஜுன் கார்கே மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் பெங்களூரில் இனிப்புகள் வழங்கி காங்கிரஸ் கட்சியின் அபார வெற்றியைக் கொண்டாடினர்.
16:12 May 13
"பிரித்தாளும் அரசியலில் பணக்காரர்களுக்கான பாஜக தோல்வி" - கே.சி.வேணுகோபால் பேட்டி
"பாஜக செய்யும் பிரித்தாளும் அரசியல் ஒவ்வொரு முறையும் வெற்றி பெறுவதில்லை. அதற்கு இந்த முடிவுகள் உதாரணமாகும். கர்நாடகாவின் ஏழைகளுக்காக நாங்கள் நின்றோம். ஆனால், பணக்காரர்களுக்காக அவர்கள் நின்றார்கள். கடைசியாக இந்த தேர்தலில் ஏழைகள் வெற்றி பெற்றனர்" என தேர்தல் வெற்றி குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் பேட்டி.
16:06 May 13
'தனது முகத்திற்காக வாக்களிப்பார் என மோடி எண்ணியது தவறு என நிரூபணம்' -சித்தராமையா
"தனது முகத்தைப் பார்த்து கர்நாடக மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்; இது தவறு என்று இந்த தேர்தல் முடிவில் நிரூபிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு செய்தியாளர்களிடத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
16:03 May 13
காந்தி நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ் குண்டுராவ் வெற்றி
காந்தி நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தினேஷ் குண்டுராவ் 105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
15:58 May 13
'கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்' - முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பரபரப்பு பேட்டி
"இந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அனைத்து காரணங்களையும் கண்டறிந்து, நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை மீண்டும் பலப்படுத்துவோம்" என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பகிரங்கமாக பேசியுள்ளார்.
15:48 May 13
'சித்தராமையா முதலமைச்சரானால், திருநங்கைகளுக்கும் ஏழைகளுக்கும் நல்லது செய்வார்' - திருநங்கை சாந்தினி
மைசூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தின் வெளியே சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக திருநங்கைகள் நான்குபேர் காத்திருந்தனர். அவர்களில் சாந்தினி என்ற ஒருவர், 'சித்தராமையா ஒருவேளை முதலமைச்சர் ஆகிவிட்டால், அவர் திருநங்கைகள் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்வார்' என்று தெரிவித்துள்ளார்.
15:39 May 13
வெற்றி சான்றிதழைப் பெற்றுக்கொண்ட டி.கே.சிவக்குமார்!
கனகபுரா தொகுதியில் வெற்றி பெற்ற கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர்கள் வழங்கினர்.
15:32 May 13
பாஜகவிற்கு வெற்றியும் தோல்வியும் புதிதல்ல! - எடியூரப்பா
"வெற்றியும் தோல்வியும் பாஜகவிற்கு ஒன்றும் புதியது இல்லை. இந்த பின்னடைவை பாஜக சுயபரிசோதனை செய்து கொள்ளும்" என கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து எடியூரப்பா செய்தியாளர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.
15:25 May 13
"முதலாளிகளுக்கான ஆட்சி செய்யும் பாஜகவிற்கு பதிலடி" - ராகுல் காந்தி பேட்டி!
"முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தும் பாஜகவுக்கு கர்நாடக மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்; அவர்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்; தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி!" என கர்நாடக தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.
15:04 May 13
நாங்கள் யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை; உழைக்க விரும்புகிறோம்! - மல்லிகார்ஜுன கார்கே
"வெற்றி பெற்றுள்ள நாங்கள் இனிமேல் உழைக்க வேண்டும். நான் யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவில் அக்கட்சியின் வெற்றி குறித்து பேசியுள்ளார்.
14:52 May 13
ராம்நகரா தொகுதியில் டி.கே.சிவக்குமாருக்கு உற்சாக வரவேற்பு
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ராம்நகரா தொகுதியில் கர்நாடக காங்கிரஸ் வெற்றி பெற்றநிலையில், அதன் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
13:50 May 13
92 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி!
கர்நாடக தேர்தலில் தற்போது வரை காங்கிரஸ் கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவை 113 இடங்கள் மட்டுமே ஆனால் அதைவிட 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
12:58 May 13
ஹர்னப்பள்ளி தொகுதியில் சுயேட்சை வெற்றி!
ஹர்னப்பள்ளி தொகுதியில் பாஜக வேட்பாளர் கருணாகர ரெட்டியை வீழ்த்தி சுயேட்சை வேட்பாளர் லதா மல்லிகார்ஜூன் வெற்றி பெற்றுள்ளார்.
12:38 May 13
பசவராஜ் பொம்மை வெற்றி!
ஷிவ்கான் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அமோக வெற்றி பெற்றார்.
12:34 May 13
ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி!
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெகதீஷ் ஷட்டர் ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர் மகேஷ் தேங்கனக்காய் 35,570 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
12:19 May 13
பசவராஜ் பொம்மை அவசர ஆலோசனை!
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிவ்கானில் உள்ள பாஜக முகாம் அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
12:12 May 13
12 மணி நிலவரம்
பிற்பகல் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 110 இடங்களில் முன்னிலையும், 12 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. பாஜக 66 இடங்களில் முன்னிலையும், 2 இடங்களில் வெற்றியையும் பதிவு செய்துள்ளது.
12:04 May 13
கோலார் தொகுதியில் ஜேடிஎஸ் முன்னிலை!
கோலார்-148 தொகுதியில் ஜேடிஎஸ் வேட்பாளர் ஸ்ரீநாத் 14,455 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
11:47 May 13
நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்!
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
11:32 May 13
ஹாசனில் ஜேடிஎஸ் வெற்றி!
ஹாசன் தொகுதியில் ஜேடிஎஸ் வேட்பாளர் ஸ்வர்ப் வெற்றி
11:21 May 13
காங்கிரஸ் கட்சிக்கு முதல் வெற்றி!
சல்லகேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரகு மூர்த்தி வெற்றி பெற்றார்.. கர்நாடகாவில் முதல் வெற்றியை பதிவு செய்தது காங்கிரஸ் கட்சி.
11:08 May 13
பாஜக முகாம் அலுவலகத்தில் பாம்பு!
ஷிகாவ்ன் பகுதியில் உள்ள பாஜக முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வருகையின் போது பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
10:53 May 13
தயார் நிலையில் 12 ஹெலிகாப்டர்கள்!
கர்நாடக தேர்தலில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை 12 ஹெலிகாப்டர்கள் மூலம் பெங்களூரு அழைத்து வந்த நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்க ஏற்பாடு நடக்கிறது. பாஜகவின் குதிரை பேரத்தை தடுக்கும் வகையில் காங்கிரஸ் திட்டம்.
10:29 May 13
ஜெகதீஷ் ஷெட்டருக்கு பெரும் பின்னடைவு!
காங்கிரஸ் சார்பில் ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர் 10 ஆயிரம் வாக்குகள் பின்னடைவில் உள்ளார்.
10:13 May 13
10 மணி நிலவரம்
காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் - 114, பாஜக - 72, ஜேடிஎஸ் -30 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
10:08 May 13
பெங்களூருவில் பாஜக ஆதிக்கம்!
பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளில் 18 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 9 இடங்களிலும், ஜேடிஎஸ் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது.
09:29 May 13
நிகில் குமாரசாமிக்கு பின்னடைவு!
ஜேடிஎஸ் தலைவர் ஹெச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி ராமநகரா தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
09:24 May 13
பெங்களூரு விரையும் காங்கிரஸ் வேட்பாளர்கள்!
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகு அணி மாறுவதை தடுக்க பெங்களூரு வர அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.
09:19 May 13
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி?
கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான 113 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதால் அக்கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.
09:03 May 13
9 மணி நிலவரம்
9 மணி நிலவரப்படி காங்கிரஸ் 94 இடங்களிலும், பாஜக 74 இடங்களிலும், ஜேடிஎஸ் 16 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
08:59 May 13
குமாரசாமிக்கு பின்னடைவு!
சென்னபட்டணா தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் ஹெச்.டி.குமாரசாமிக்கு பின்னடைவு
08:57 May 13
காந்திநகர் தொகுதியில் குண்டுராவ் முன்னிலை
காந்திநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவ் முன்னிலை வகிக்கிறார்.
08:34 May 13
காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சிவக்குமார் முன்னிலை
கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் முன்னிலை வகிக்கிறார்.
08:31 May 13
சிக்மங்களூருவில் சி.டி.ரவி முன்னிலை!
சிக்மங்களூரு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், பாஜக தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி முன்னிலை வகிக்கிறார்.
08:25 May 13
அனுமன் கோயிலில் பசவராஜ் பொம்மை சாமி தரிசனம்!
கர்நாடக தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஹூப்ளியில் உள்ள அனுமன் கோயிலில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சாமி தரிசனம் செய்தார்.
08:20 May 13
ஜெகதீஷ் ஷெட்டர் முன்னிலை!
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் சார்பில் ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர் முன்னிலை
08:05 May 13
தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை
8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பாஜக -22, காங்கிரஸ்-16, ஜேடிஎஸ்-7 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
08:02 May 13
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
பெங்களூருவில் உள்ள 5 மையங்கள் உட்பட மொத்தமுள்ள 36 மையங்களில் சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
07:57 May 13
காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டம் ஆரம்பம்!
கர்நாடகா தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மேளதாளத்துடன் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
07:42 May 13
ஈவிஎம் அறைகள் திறப்பு!
இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள்(Electronic Voting Machine) வைக்கப்பட்டுள்ள அறைகள் திறக்கப்பட்டு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மேஜைக்கு எடுத்து வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
07:39 May 13
"கூட்டணி குறித்து யாரும் பேசவில்லை"
தற்போது வரை கூட்டணி குறித்து யாரும் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை; எனக்கு எந்த நிபந்தனையும் இல்லை என பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
07:33 May 13
வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு
36 வாக்கு எண்ணும் மையங்களில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களின் முகவர், வாக்கு எண்ணும் அதிகாரிகள் தவிர வேறு யாருக்கும் மையத்திற்குள் அனுமதி இல்லை.
07:31 May 13
களத்தில் 2,615 வேட்பாளர்கள்!
கர்நாடக தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், சிபிஎம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
07:30 May 13
மும்முனை போட்டி
பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம்(JDS) இடையே மும்முனை போட்டி நிலவுகிறது
07:28 May 13
கர்நாடக தேர்தலில் 73.19% வாக்குப்பதிவு
கடந்த மே 10-ம் தேதி புதன்கிழமை மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 73.19 விழுக்காடு வாக்குகள் பதிவானது
07:11 May 13
காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை!
கர்நாடகாவில் கடந்த 10-ஆம் தேதி 224 தொகுதிகளில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இதற்காக 36 மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.