டெல்லி: கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துவரும் வேளையில், 18 - 44 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.
எனினும் சில மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என ஏப்ரல் 19ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசியைக் கொள்முதல் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அளித்துள்ள தகவலின்படி, 2.45 கோடிக்கும் அதிகமானோர் கோவின் தளத்தில் தடுப்பூசிக்காகப் பதிவுசெய்துள்ளனர். எனினும் தடுப்பூசி கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பலருக்கும் தடுப்பூசி கிடைக்கவில்லை.
டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திரா, கோவா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் 18 - 44 வயதுடையவர்களுக்குச் செலுத்துவதற்கான தடுப்பூசியைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியின் மூன்றாம் கட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.