ஹைதராபாத்:தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். மலையாள முன்னணி நடிகர்களுள் ஒருவராகவும் வலம் வருபவர் டொவினோ தாமஸ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மின்னல் முரளி, 2018 போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது. 2018 என்ற படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
இந்தப் படம் தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு, தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. கேரளா வெள்ளத்தின்போது நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் டொவினோ தாமஸின் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. 2018 படத்தில் டொவினோவின் இயல்பான நடிப்பு ரசிகர்களிடமிருந்து வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றது.
இதனைத்தொடர்ந்து தற்போது நடிகர் டொவினோ, அவருடைய அடுத்த படத்தை பற்றிய தகவல்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் இவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டொவினோ தனது சமூக வலைதளப் பக்கத்தில் வரும் ஜூலை 11ஆம் தேதி நடிகர் திலகம் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும், இதனை தற்போது அறிவிப்பதில் மிகுந்த சந்தோஷம் என்று பதிவிட்டுள்ளார்.