புதுச்சேரி: சுகாதாரத் துறையும் பாரதிதாசன் அரசுக் கல்லூரியும் இணைந்து நான்கு நாள்களுக்கு கரோனா தடுப்பூசி முகாமினைத் தொடங்கி நடத்திவருகின்றன. இம்முகாமினை துணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கிவைத்தார்.
அப்போது பேசிய அவர், "கல்லூரி மாணவிகளே தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுவது வருத்தமாக இருக்கிறது. கட்டாயப்படுத்தி யாரையும் தடுப்பூசி போடவைக்க முடியாது. மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல் பிற கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி போட்டால்தான் கல்லூரி திறக்கப்படும்" என்றார்.
தமிழிசை பேசி முடித்தவுடன பேராசிரியர் ஒருவர் எழுந்து, "தடுப்பூசி போடுவதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது. கல்லூரியிலேயே எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். நாள்தோறும் ஆறாயிரம் பேர் வந்துசெல்கின்றனர். இதனால் கரோனா பரவ வாய்ப்புள்ளது" எனக் கூறினார்.
அதற்குப் பதில் அளித்த தமிழிசை, "ஜனநாயக நாட்டில் எதையும் கட்டாயப்படுத்தக் கூடாது. உலகச் சுகாதார நிறுவனமும் கட்டாயப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி உள்ளது. அதனால்தான் பரப்புரை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம்.
பிரதமர்கூட 40 கோடி பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பாகுபலியாக மாறியுள்ளனர் எனக் கூறியுள்ளார். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு பாகுபலியாக மாற வேண்டும்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், "புதுச்சேரியில் கரோனா நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பும் குறைந்துவிட்டது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துவருகிறது.
கர்ப்பிணிகளுக்குச் சத்துணவுத் திட்டம் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அது சத்து பொருள்கள் கொண்ட பரிசுப் பெட்டகமாக இருக்கும். அரசு மருத்துவமனைக்கு வந்து பிரசவம் பார்க்கும் பெண்களுக்குதான் சத்து பரிசுப்பெட்டகம் அளிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க:பெகாசஸ் சர்ச்சை: திருணமூல் காங்கிரஸ் எம்பி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்