ஹைதராபாத்:சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கடந்த ஆக்ஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதனால் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் புதிய சரித்திர சாதனையை பெற்றது, இந்தியா. இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்கு நாட்களுக்குப் பின்னர், இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனம் சந்திரயான்-3இன் ஆரம்ப கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதில் நிலவின் தென் துருவத்தைச் சுற்றியுள்ள மண்ணின் வெப்பநிலையை ஆய்வு செய்து விகரம் லேண்டர் அதன் தகவல்களை அனுப்பியுள்ளது. இதன்படி, சந்திரயான்-3இன் பிரக்யான் ரோவர், நிலவின் தென் துருவத்தில் வெப்பத்தை ஆய்வு செய்வதற்காக நிலவின் மேற்பரப்பிற்கு அடியில் 10 சென்டி மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்துள்ளது.
நிலவின் தென்துருவத்தின் வெப்பநிலை பதிவு செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும். இதன்படி இஸ்ரோ வெளியிட்டுள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள வெப்பநிலை -10 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 29) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சந்திரயான்-3 ரோவரில் பொருத்தப்பட்டுள்ள லேசர் பேலோட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி இயந்திரம் முதன் முதலில் நிலவின் தென் துருவத்தில் உள்ள மேல் பரப்பை அளவீடு செய்து அடிப்படை தனிம கலவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும். இதன்படி நிலவின் மேற்பரப்பில் சல்பர் (S) இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது.