டெல்லி:உலகின் சக்தி வாய்ந்த மிக முக்கிய நாடுகளான இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகளை தன்னகத்தே கொண்ட அமைப்பாக ஜி20 அமைப்பு திகழ்ந்து வருகிறது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஜி20 உச்சி மாநாடு இன்றும்,நாளையும் (செப்டம்பர் 9 மற்றும்10) தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது.
ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு, ஆண்டுதோறும் அந்தந்த உறுப்பினர்கள் சார்ந்த நாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த 2023ஆம் ஆண்டிற்கான, உசி மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று உள்ளது.
தலைநகர் டெல்லியில், ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள உலகத் தலைவர்களை பாரத் மண்டபத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் வைத்து பிரதமர் மோடி வரவேற்றார்.
ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் நான் வருத்தமடைகிறேன். அங்குள்ள மக்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து உலக நாடுகளின் தலைவர்களையும் இந்தியா வரவேற்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில், அசோகர் தூண் உள்ளது. அதில் மனிதகுலத்தின் நலன் மற்றும் நலன் உறுதி செய்யப்பட வேண்டும் என்று பிராகிருத மொழியில் எழுதப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.